லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் ஆட்டு இறைச்சி, கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்ந்து உள்ளது. இதோடு சேர்த்து இப்போது ஆட்டு இறைச்சி, கோழிக்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும் கோழி வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.80-க்கு விற்பனை ஆனது, ரூ.90 ஆக உயர்ந்தது. முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.2.25-க்கும், மொத்த கடைகளில் ஒரு முட்டை ரூ.1.90-க்கும் விற்பனை ஆகிறது.
2வது நாளாக போராட்டம் நீடித்து வருவதால் ஆட்டு இறைச்சி, கோழிக்கறி விலை மேலும் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ஆடுகள் லாரிகளில் கொண்டு வரப்படும். இவை வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் இறைச்சிக்காக தினமும் 3000 ஆடுகள் வெட்டப்பட்டு வந்தன.
வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அயல் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆடுகள் வரத்து குறைந்து விட்டது. இதனால் ஆட்டு இறைச்சியின் விலை கிலோ ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. லாரி வாடகை அதிகரித்ததாலே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த விலை உயர்வு குறித்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் அன்புவேந்தன் கூறுகையில், சென்னையில் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சியின் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை அதிகரித்துள்ளது. இதற்கு லாரி வாடகை உயர்வே காரணம் என்றார்.
கோழிக்கறி வியாபாரி புகழேந்தி கூறுகையில், வேலூர், குடியாத்தம், சித்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு கறிக்கோழிகள் வருகின்றன. இந்த போராட்டத்தால் கோழிக்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. போராட்டம் நீடித்துக் கொண்டே போனால் கிலோவுக்கு ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளது என்றார்.