பேருந்துகளில் பிக்பாக்கெட், பெண்களிடம் குறும்பு செய்வோர் பற்றி புகார் வந்த உடன் நடத்துனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் பேருந்துகளை சுத்தம் செய்யும் கருவியை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பேசுகையில், பேருந்தை சுத்தம் செய்யும் கருவி இன்னும் 7 போக்குவரத்து பணிமனைகளில் பொருத்தப்படும். செம்மனஞ்சேரி, கண்ணகி நகர், பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்றார் அமைச்சர் கே.என்.நேரு.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பேருந்துகளில் பெண்களிடம் குறும்பு தகராறு, பிக்பாக்கெட் போன்ற நிகழ்வுகள் நடந்தால் நடத்துனர் கவனத்துக்கு வந்ததும், அதை தடுக்க நடத்துனர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் மீது துறை வாரியாக விசாரணை நடத்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் நேரு எச்சரிக்கை விடுத்தார்.