2007-2008 முதல் 2011-2012 வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையை மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் திட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாநில திட்டக்குழுவின் தலைவர் முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
இந்த திட்ட அறிக்கையில் நடுவண் அரசின் திட்டக் குழு 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 9 விழுக்காடு வளர்ச்சி இலக்கினை இயைந்த வளர்ச்சி அணுகுமுறை வாயிலாக எய்திட வேண்டுமென முன்மொழிந்துள்ளது.
இத்திட்ட காலத்தில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஆண்டு வளர்ச்சி 4 விழுக்காட்டினை எட்ட வேண்டும் எனும் இலக்கு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்திற்கான மொத்த திட்ட அளவு ரூ.43,400 கோடி, அது, 11வது திட்ட காலத்திற்கு இரு மடங்காக ரூ.85,344 கோடி என உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், வேளாண்மை மற்றும் பாசனத் துறைக்கான திட்டச் செலவு ரூ.4,500 கோடி என்பதிலிருந்து ரூ.11,145 கோடி எனவும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.5,400 கோடி என்பது ரூ.10,241 கோடி எனவும், மின்சாரத் துறைக்கு ரூ.5,800 கோடி என்பது ரூ.10,743 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் தொழில் துறைக்கு ரூ.2,000 கோடி என்பது ரூ.3,716 கோடி எனவும், சாலைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.5,900 கோடி என்பது ரூ.11,647 கோடி எனவும், சமூகப் பணிகளுக்கு ரூ.19,000 கோடி என்பது ரூ.36,733 கோடி என்றும், இதர பணிகளுக்கான திட்டச் செலவு ரூ.800 கோடி என்பது ரூ.1,121 கோடி என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மைக் குறிக்கோளான மாநில பொருளாதாரத்தில் ஆண்டு வளர்ச்சி வீதம் 9 விழுக்காட்டினைப் பெறுவதற்குரிய தொடர் முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.