பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுக்கு உணவு அமைச்சர் எ.வ.வேலு உத்தர விட்டுள்ளார்.
எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் உணவு அமைச்சர் எ.வ.வேலு தற்போதுள்ள பெட்ரோல், டீசல் இருப்பு நிலவரம் குறித்தும், விற்பனை மற்றும் தொடர் நடவடிக்கைகளை குறித்தும் ஆலேசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பொது மக்களின் தேவைகேற்ப பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டார்.
அதோடு உயரக எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யும் நிலையங்களில் உடனடியாக சாதாரண வகை எரிபொருள்களையும் விற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவையான இருப்பினை தமிழகத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருப்பாக வைக்க வேண்டும் என்றும், பங்குகளில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு இருப்பு தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் அதிக விலைக்கு விற்பவர்கள், பதுக்குபவர்கள் மற்றும் தவறு புரியும் பெட்ரோலிய டீலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், மாவட்டந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோர் அமைப்புகளுடனும், மாவட்ட நிர்வாகத்துடனும் இணைந்து பெட்ரோலிய பொருட்களின் விரயத்தை தவிர்த்து முறையாக பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி பொது மக்களிடம் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.