தமிழக அரசின் சலுகை விலை சிமெண்ட் விற்பனைக்கு விதிகள் தளர்த்தப்பட்டு, பராமரிப்புபணிக்காக 50 மூட்டைகள் வரை உயர்த்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு சிமெண்ட் விற்பனையில் பொது மக்கள் மேலும் பயன் பெறும் வகையில், சில விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.
அதன்படி பராமரிப்பு செய்வதற்காக சலுகை விலையில் எந்தவித ஆவணமும் இன்றி 25 மூட்டைகள் சிமெண்ட் இதுவரை அனுமதிக்கப்பட்டது. தற்போது இதன் அளவு 50 மூட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இனி பொது மக்கள் 100 மூட்டை சிமெண்ட் தேவையிருப்பின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அதற்கான உரிய விண்ணப்பம் அளித்து குடும்ப அட்டையின் பேரில் சலுகை விலையில் சிமெண்ட் வாங்கி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக குடியிருப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் தேவையில்லை. அரசின் இச்சலுகையின் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.