தடிமர போக்குவரத்து விதியில் உரிய திருத்தங்கள் செய்யும் வரை மூங்கில், புங்கம் உள்ளிட்ட 36 வகையான மரங்களை உரிமம் இன்றி வெட்டி எடுத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளும், வனப்பகுதி மக்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் மூங்கில், இலவம், பனை, சவுக்கு, கல்யாண முருங்கை, தைலம், ரப்பர், இலுப்பை, புங்கம் உள்ளிட்ட 36 வகையான மரங்களை வளர்த்து அவற்றை வெட்டி விற்பனை செய்யலாம். இதற்கு உரிமம் தேவையில்லை என 2007 நவம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு வனத்துறை ஊழியர் சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய பொதுநல அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவில், அரசின் இந்த உத்தரவால் தனியார் நிலம் மட்டுமின்றி, அரசு நிலங்களில் உள்ள மரங்களையும் சட்ட விரோதமாக வெட்டி கடத்துவது அதிகரிக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும். தடிமர போக்குவரத்து விதிகள்-1968 ல் உரிய திருத்தம் செய்யாமல் அரசாணை பிறப்பிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா அடங்கிய பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், தடிமர போக்குவரத்து விதியில் உரிய திருத்தங்களை செய்யும் வரையில் அரசு பிறப்பித்த ஆணையை செயல்படுத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.