2வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் முடங்கியுள்ளன.
சேவை வரி, சுங்க வரி ரத்து, தட்டுப்பாடின்றி டீசல் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 48 லட்சம் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் லாரிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சரக்குகளைக் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்களில் வந்து சேர்ந்துள்ள சரக்குகள் அனைத்தும் அப்படியே தேங்கி கிடக்கின்றன. இதனால் நாளொன்றுக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செங்கோடன் கூறுகையில், மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தமிழகத்தைப் பொருத்தமட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சுமூகத் தீர்வு காணும் வரையில் போராட்டம் தொடரும் என்றார் செங்கோடன்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 18,000 லாரிகள் ஓடவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து தினமும் 3000 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தத்தால் தற்போது சரக்குகள் முற்றிலும் தேக்கமடைந்துள்ளன.
கோவை அருகே பல்லடம், பொங்கலூர் ஆகிய பகுதிகளில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து, கேரளா உள்ளிட்ட அளல் மாநிலங்களுக்கு தினமும் 15 லட்சம் கறிக்கோழிகள் அனுப்பப்படும். தற்போது இவை அனைத்தும் முடங்கியுள்ளன.
வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணி முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையிலிருந்து வெளியிடங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் பணிகளும் பாதிக்கப்பட்டன.
கரூரில் ஒரே நாளில் ரூ. 20 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்தன. மேலும் ரூ. 1.5 கோடிக்கான உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 3,000 சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,000 லாரிகளும், 2,000 டெம்போக்களும் இயங்கவில்லை. இதனால், கடலோரக் கிராமங்களில் ஏற்றுமதி மீன்கள் தேங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள மஞ்சள் மற்றும் ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.