ரூ.7,290 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் துறைமுகம் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், நாகார்ஜுனா உரம் மற்றும் ரசாயன நிறுவனம், டாடா குழுமம் மற்றும் கடலூர் துறைமுகக் கம்பெனி ஆகியவற்றுடன் இணைந்து ஆண்டுக்கு 60 லட்சம் டன் திறன்கொண்ட ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தை கடலூருக்கு அருகில் 4,790 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டுத்துறையில் தொடங்கிட திட்டமிட்டுள்ளது.
33 மாதங்களில் இத்திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு 2011 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். நிலக்கரியை இறக்கு மதி செய்வதற்குப் பயன்படும் வகையில் ஆண்டுக்கு 250 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடன் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் நாகார்ஜ×னா எண்ணெய் நிறுவனத்தின் மூலம் திருச்சோ புரத்தில் ஆழ்கடல் துறை முகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இத்துறைமுகம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உருவாகவிருக்கும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்திக்கான தொழில்களுக்கு ஒரு முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பாகவும் விளங்கும்.
கடலூருக்கு அருகில் சிலம்பிமங்கலம் என்ற இடத்தில் குட் எர்த் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் 75,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய கப்பல்களைக் கட்டும் தளம் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவிருக்கிறது. இதனால் சிறு தொழில்கள் பெருமளவில் உருவாக வாய்ப்புள்ளது.
மொத்தம் 7,290 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும், நாகார்ஜுனா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், திருச்சோபுரம் துறைமுகத் திட்டம், சிலம்பிமங்கலத்தில் குட்எர்த் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டங்களின் மூலமும், துணைத் தொழில்கள் மூலமும் ஏறத்தாழ 5,700 பேருக்கு நேரடியாகவும், 11,300 பேருக்கு மறை முகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.