நீதிமன்ற ஊழியர்களை நீதிபதிகளாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கமும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் ஜூலை 4ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் பணியாற்றுபவர்கள் சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது என்று சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், தமிழகத்தில் 201 மாஜிஸ்திரேட் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வில் பி.எல். படித்த நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொள்ளலாம் என சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களாக பதிவு செய்து தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 4 ம் தேதி வரை தமிழகம், மட்டும் புதுச்சேரி வக்கீல்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.