சிறிலங்காவில் சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியப் படை வீரர்கள் அனுப்பப்படுவதை தமிழர்கள் ஆட்சேபிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமருக்குப் பாதுகாப்பு என்ற போர்வையில் 3,000 வீரர்கள் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதாகவும் முதல் கட்டமாக 1,500 பேர் கொழும்பு சென்றுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி தருகின்றன.
கடந்த வாரம் இலங்கை சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு ராணுவ உதவி குறித்து பேசியதாக வந்த செய்தி இப்போது உறுதியாகியுள்ளது.
வங்க தேசம், நேபாளம், சிக்கிம், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் சார்க் மாநாடுகள் நடைபெற்றபோது, இவ்வளவு வீரர்கள் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டதில்லை.
எந்த சர்வதேச மாநாட்டையும் ஏற்பாடு செய்யும் நாட்டின் அரசுதான் உலகத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தரவேண்டும் என்பது மரபு மட்டுமல்ல. கட்டாயம். அன்னியப் படை வீரர்களை அனுப்பதில்லை. தலைவர்கள் தங்களது சொந்த மெய்க்காவல் படையினரை மட்டுமே அழைத்து வர அனுமதிக்கப்படுவர்.
இப்போது பிரதமரின் பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர்களை மாநாட்டுக்குப் பின் தங்கவைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்க அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதற்கு இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.