இன்று நள்ளிரவு முதல் தென் மாநிலங்களில் 5 லட்சம் லாரிகள் இயங்காது. இதனால் தினமும் ரூ.150 கோடிக்கு இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஜூலை 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது தொடர்பான தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முழு ஆதரவு அளித்துள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் செங்கோடன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை பாலங்களில் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமான சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பழைய பாலங்களுக்கும் பல ஆண்டுகளாக சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகியவை தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். பல பகுதிகளில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயல் லாரி உரிமையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலியத்துறை அமைச்சர் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க ஆவன செய்யவேண்டும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து கனரக வாகனங்களுக்கும் வேககட்டுப்பாட்டுக்கருவி பொருத்தவேண்டும் என்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இந்த போராட்டத்தினால் தென் மாநிலங்களில் 5 லட்சம் லாரிகள் இயங்காது. இதனால் தினமும் ரூ.150 கோடி இழப்பு ஏற்படும்.
இந்தியா முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தென்னிந்திய அளவில் வேலை நிறுத்தத்தால் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள 25 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று செங்கோடன் கூறினார்.