''கடலோர மாவட்டங்களில் மேலும் 5 கடலோர கண்காணிப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.
கோவையில் இன்று மாலை நடைபெறும் ஊர்க்காவல் படைக்கான விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் பணிக்காக காவல்துறையினருக்கு கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஒருங்கிணைப்புத் திட்டத்தின் படி காவல்துறை நிர்வாகம் மட்டு மல்லாமல் குற்றவாளிகளின் விவரங்கள் பற்றியும் அவர்களை பிடிக்க வகுக்கப்படும் வியூகங்கள் பற்றிய தகவல்களும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுடன் பரிமாறிக் கொள்ளலாம்.
3வது காவல்துறை கமிஷன் அமைக்கப்பட்டு அதில் பரிந்துரைக்கப்பட்ட பல சிபாரிசுகள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காவல்துறையில் 15,000 காலி பணியிடங்கள் உள்ளன. அவைகளை விரைவில் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே 12 கடலோர கண்காணிப்பு காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், 5 கடலோர கண்காணிப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையின் உதவியுடன் இந்த காவல் நிலையங்கள் இயங்கும் என்று கே.பி.ஜெயின் கூறினார்.