பா.ம.க.வை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை, எதிரி கட்சியாக பார்க்கிறார் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னை அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மது ஒழிப்புக்காக இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக மாவட்டந் தோறும் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். ஜூலை 8ஆம் தேதி ராமநாதபுரத்திலும், 9ஆம் தேதி நாகர்கோவிலிலும் மாநாடு நடக்கிறது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாநாடு நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு ஜூலை 12ஆம் தேதி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். 4 தலைமுறைகள் வீணாக்கப்பட்டுள்ளதால் இந்த தலை முறையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 70-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரே உத்தரவில் அதை ரத்து செய்து விட்டார்கள். கடந்த ஆட்சியில் சிறுசேரியில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகம் வரப்போவதாக சொன்னார்கள். அதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் அந்த அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்தது.
சிப்காட்டுக்கு சொந்தமான 103 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் அந்த திட்டத்தையே ரத்து செய்தது அ.இ.அ.தி.மு.க. மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந் தது ஏன்?
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவில் இருந்து நாங்கள் பின் வாங்கவில்லை. அவர்கள் தான் எங்களை வேண்டாம் என்றார்கள். பா.ம.க.வை மட்டும் எதிர்க் கட்சியாக பார்க்கவில்லை. எதிரி கட்சியாக பார்க்கிறார் என்று ராமதாஸ் கூறினார்.