அரசு ஒதுக்கீடு உடன்பாட்டிற்கு கட்டுப்படாத சுயநிதி பொறியியல் கல்லூரிகள் எவை? அவற்றின் பின்னணி என்ன? என்ற விவரங்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக முறையே 65:35 என்ற விகிதத்தில் நிரப்பிக்கொள்ளத் தக்க வகையில் தங்களுடைய உடன்பாட்டினைக் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர் என்று நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு அறிவித்திருந்தது.
ஆனால், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த உடன்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இப்போது சொல்கிறார். அப்படியானால், வழக்கு நிலுவையில் உள்ளது என்கிற விவரம் நீதிபதி பாலசுப்பிரமணியம் குழுவுக்கு கூடத் தெரியாமல் போனது எப்படி? முதலமைச்சரிடமும் இந்த வழக்கு குறித்த விவரம் மறைக்கப்பட்டது ஏன்?.
மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 278 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன என்றும் இவற்றில் 165 கல்லூரிகள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டிற்கு 65 சதவீத இடங்களை வழங்க இசைவுக் கடிதம் கொடுத்திருக்கின்றன என்றும் அமைச்சர் சொல்லியிருக்கிறார். அப்படியானால் 113 கல்லூரிகள் இந்த உடன்பாட்டிற்கு உடன்படவில்லை என்கிறது தெரிகிறது.
அரசாங்கத்திற்கு கட்டுப்படாத அந்தக் கல்லூரிகளெல்லாம் எவை? அவற்றை யார் நடத்துகிறார்கள்? அவற்றின் பின்னணி என்ன? அவர்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள்? என்ற விவரங்களை எல்லாம் மக்களுக்கு அடையாளம் காட்டுவது அரசின் பொறுப்பாகும்.
அரசு நிர்ணயித்தக் கட்டணத்தில் மாணவர்களைச் சில சுயநிதி கல்லூரிகள் அனுமதிப்பதில்லை. யார் யார் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்வதற்கான சட்டமும் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் அரசு தயங்குகிறது. அது ஏன் என்பது மட்டும் புரியவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.