அணுசக்தி உடன்பாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், பிரதமர் மன்மோகன் சிங்குடனும் அடிக்கடி பேசி வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் டெல்லி செல்ல இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி நடந்த இடதுசாரி - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால், மத்திய அரசுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
டெல்லியில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டணியின் மூத்த தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி ஜூலை முதல் வாரம் டெல்லி செல்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இதனைத் தீர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் அடிக்கடி பேசி வருகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் ஏற்படுத்த ஜூலை முதல் வாரத்தில் டெல்லி செல்ல இருக்கிறேன். அதற்கான தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.