அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ள கலந்தாய்வு மூலம் அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் எடப்பாடியை சேர்ந்த மாணவி ரெஹனா முதல் இடம் பெற்றுள்ளார்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ- மாணவிகளின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. முதல் 9 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியலை உயர் கல்வித்துறை செயலாளர் கே.கணேசன், துணைவேந்தர் டி.விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
சேலம் மாவட்டம் மேல்முகை கிராமத்தை சேர்ந்த ரெஹனா ராஜேந்திரன் என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் சேர்ந்த மாணவர் எஸ்.வி.மனோஜ்குமாரும், 3வது இடத்தை செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரத்தை சேர்ந்த வி.அருணும், 4வது இடத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை டி.தினேஷ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் 5வது இடத்தையும், சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த மாணவர்கள் சி.பல்லவி 6வது இடத்தையும், சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆஷா கணேசன் 7வது இடத்தையும், திருநெல்வேலியை சேர்ந்த ஏ.எம்.விக்னேஷ் 8வது இடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த இ.மனோஜ்குமார் 9வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு!
ஜூலை 3ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை உடல் ஊனமுற்றோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 9ஆம் தேதி அயல் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஜூலை 11ஆம் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைகிறது. அனைத்து கலந்தாய்வுகளும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.