''மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவது விஷயத்தில் ராமதாசும், மத்திய அமச்சர் அன்புமணியும் இரட்டை வேடம் போடுகின்றனர்'' என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அரசு இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. மக்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பாக அரசு இதற்கான உத்தரவை வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி பேரணி, மாநாடு நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்த பின் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எளிய மக்களை மிரட்டியது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மிரட்டி வரும் பா.ம.க. மீது தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையில் போற்றுகிற மாதிரியும் இல்லை, தூற்றுகிற மாதிரியும் இல்லை. பா.ம.க. முதலில் திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றட்டும். அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பற்றி பேசட்டும். மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவது விஷயத்தில் டாக்டர் ராமதாசும், மத்திய அமைச்சர் அன்புமணியும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றார் கிருஷ்ணசாமி.