எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சி மீது ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் தொலைக்காட்சியில் புஷ்பராஜ், பாஸ்கரன், மாரியப்பன், ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளனர். இந்த தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் என்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்படுகிறது.
நானும், முன்னாள் ஆட்சியத் தலைவரும் சேர்ந்து அரசு நிலத்தை பினாமி பெயரில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை வடநெமிலியில் எனக்கு நிலம் கிடையாது. நான் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை.
எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தொலைக்காட்சியும், தொகுப்பாளர்களும் சேர்ந்து எனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். உண்மைக்கு புறம்பான என் தொடர்பான செய்தியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மக்கள் தொலைக்காட்சிக்கு தாக்கீது அனுப்பும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கை ஜூலை 7ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.