தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் மொத்தம் 5,401 ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பணி நியமனத்துக்காக வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நாடுநர் பட்டியல் பெறப்படுகிறது. இதில் கடந்த காலத்தில் ஓரிடத்துக்கு ஒருவர் என்ற வகையில் பெயர்கள் கோரப்பட்டு வந்தன.
இதனால், உரிய காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக பலர் வராததாலும், அனைத்து இடங்களும் நிரப்பப்படாத நிலை ஏற்பட்டதாலும் இந்த முறை ஓரிடத்துக்கு 5 பெயர்கள் என்று பட்டியல் கோரப்படுகிறது. இதில், வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில்தான் அழைக்கப்படுகிறார்கள்.
எனவே, ஆசிரியர் நியமனத்துக்கு பரிந்துரை செய்வதாக யாராவது கூறினால் ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு மூப்பின்படி முதுகலை ஆசிரியர்கள் 1621 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3107 பேர், தமிழாசிரியர்கள் 360 பேர், இதர ஆசிரியர்கள் 1313 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.