சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்' என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதியுடன் கூறினார்.
திருச்சியில் நேற்று நடந்த தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், அண்டை மாநிலங்களான கர்நாடகம் உட்பட தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதை மறுத்து வருகின்றன. மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலமும், நேரிலும் கோரிக்கைகள் விடுத்தும், நீதிமன்றங்கள் மூலமாக அணுகியும்கூட பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
எனவே, இந்தத் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் எனும் கருத்து இப்பொழுது நாடு முழுவதும் எழுந்துள்ளது. முதல் முதலாக மாநிலங்களுக்குள்ளே ஓடும் நதிகளை எல்லாம் இணைத்து, இந்த நதிகளினுடைய இணைப்பு விழாவை இந்தியாவிலேயே முதன் முதலாக நடத்துகிற மாநிலம் தமிழகம் ஆகும். அத்தகையதோர் மாபெரும் செயலாகும் இது.
விலைவாசி ஏறுகிறதா? எந்த அளவுக்கு ஏறியிருக்கிறது? எந்த அளவுக்குக் குறைத்தால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும் என்பதை யோசித்துப் பார்த்து அதற்கேற்ப பணியாற்றுகிறோம், நிர்வாகத்தை நடத்துகிறோம். அப்படி மக்களின் துயரங்களையும் அறிந்து, மக்களுடைய கஷ்டங்களையும் அளந்து பார்த்து அதற்கேற்ப நிர்வாகத்தை நடத்துகின்ற ஒரு அரசாக இந்த அரசு இருக்கின்றது. அதற்கிடையிலேதான் இப்படிப்பட்ட மாபெரும் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
நமது திட்டங்களை நிறைவேற்ற, இன்னும் நம்முடைய எண்ணம் நிறைவேறுமேயானால், நிறைவேறுவதற்கு நாங்கள் நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெறுமேயானால், சேதுசமுத்திரத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு தயங்க மாட்டோம் - நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.