அதிவேக ஈனுலையின் பாதுகாப்பு கலம் பொருத்தப்பட்டது!
, செவ்வாய், 24 ஜூன் 2008 (18:57 IST)
இந்திய அணு சக்தி ஆராய்ச்சியின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் அத்தாட்சியாக கல்பாக்கத்தில் கட்டப்பட்டுவரும் Fast Breeder Reactor (FBR) என்றழைக்கப்படும் அதிவேக ஈனுலைக்கான பாதுகாப்பு கலம் இன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.2,440 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த அணு உலையின் முக்கிய பகுதியான சேஃப்டி வெஸ்ஸல் என்றழைக்கப்படும் பாதுகாப்புக் கலம் இன்று மதியம் வேக ஈனுலை அமைக்கப்படவுள்ள கட்டமைப்பிற்குள் பத்திரமாக இறக்கப்பட்டது.13.5
மீட்டர் விட்டமும், 13 மீட்டர் உயரமும், 15 மிமி கனமும் கொண்ட இந்த பாதுகாப்புக் கலத்திற்குள்தான், ஈனுலை செயல்படும் முக்கியக் கலம் பொறுத்தப்படவுள்ளது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி செல்லப்பாண்டி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவால் வடிவமைக்கப்பட்ட இக்கலத்தை, எல்.என்.304 என்ற திடப்பொருளால் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஈனுலை செயல்படும்போது உருவாகும் 600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் முக்கிய கலத்தை தாங்கி நிற்கப்போகும் இந்த பாதுகாப்புக் கலம், ஈனுலையின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவுவது மட்டுமின்றி, ஈனுலையில் ஏதேனும் (உயர் வெப்ப சோடியம்) கசிவு ஏற்பட்டாலும் பெரும் விபத்தாவைத் தடுத்துவிடும் பாதுகாப்பு கவசமாக இருக்கும்.இதன் தாங்கு திறன் இதுவரை உலக அளவில் தயாரிக்கப்பட்ட எந்த ஈனுலை பாதுகாப்பு கலங்களைக் காட்டிலும் அதிகமானது. அதாவது +/- 12 அளவிளான திடத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனுலையை கட்டமைத்துவரும் இந்திய அரசு நிறுவனமான பாவினியின் மேற்பார்வையில் கல்பாக்கத்திலேயே இந்த பாதுகாப்புக் கலம் உருவாக்கப்பட்டு, ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட 300 டன் கையாளல் திறன் கொண்ட தானியங்கி தூக்கி மூலம் இன்று காலை மிகுந்த பாதுகாப்பிற்கு இடையே அணு உலை அமையவுள்ள பகுதியில் பத்திரமாக இறக்கப்பட்டது.
அதிவேக ஈனுலை கட்டமைப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் பாதுகாப்புக் கலம் இறக்கிப் பொறுத்தப்படுவதை இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத் தலைவர் பல்தேவ் ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியை பார்வையிட செய்தியாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஈனுலையின் பாதுகாப்பு கலம் பொறுத்தப்பட்டுவிட்டதால் அடுத்த 3 மாத காலத்தில் ஈனுலைக் கலம் இறக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய பாவினியின் இயக்குனர் பிரபாத் குமார் கூறினார்.
2010 ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்தியைத் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அதிவேக ஈனுலை வெற்றிகரமாக செயல்படத் துவங்கினால் அது உலக அளவில் இந்தியாவின் அணு ஆராய்ச்சிக்கு பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுத்தரும்.