ஒருசில மாதங்களிலேயே இரண்டு தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி இருப்பதையும், அது விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்க முடியாத அளவுக்கு மதுரை மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும், இது குறித்த புகாரை காவல் துறையினர் ஆளுங்கட்சியின் தலையீடு காரணமாக வாங்கவே மறுக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன. திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சனை காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்ட ஒருசில மாதங்களிலேயே இரண்டு தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? எல்லாம் சுயநலம்தான். அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும் அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
தன்னுடைய மகனை மீறி தைரியமாக செயல்படக் கூடிய நிலைமையில் முதலமைச்சர் கருணாநிதி இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. கருணாநிதிக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை மாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களை கண்டு மகிழ்வதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும், நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.