''சுயநிதி கல்லூரிகளில் 65 விழுக்காடு அரசு ஒதுக்கீடு என்பதை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே ராமதாசின் ஐயப்பாடு தேவையே இல்லாதது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் 65 விழுக்காடு இடம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார். தோழமைக் கட்சிப் பிரதிநிதிகளோடும் சுயநிதிக் கல்லூரி சங்கங்களுடனும் அரசின் சார்பில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் தான் நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு அறிக்கை வெளிவந்தது.
அதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக அமைப்பு தலைவர் ஜே.பி.ஆர். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி தங்களுக்கே 100 விழுக்காட்டையும் நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது என்றும், கட்டண உயர்வு போதாதென்றும், அரசு நியமிக்கும் இடங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றும் அறிக்கை விடுத்ததை ராமதாஸ் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.
இதைப் படித்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி குழு நிர்ணயித்த கட்டணத்திற்கும், அரசு ஒதுக்கீட்டிற்கு 65 விழுக்காடு என்பதை சுயநிதிக் கல்லூரிகள் ஏற்றுக் கொண்டு மாணவர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக ஒத்துழைக்க வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து தான் உயர்கல்விச் செயலாளர் அந்தச் சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவை எட்டியுள்ளார்.
பாலசுப்பிரமணியம் குழு கட்டணத்தை மட்டும் நிர்ணயிக்க முடியும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் குறித்து உயர்கல்வித்துறை செயலாளரால் சங்கங்களுடன் பேசப்பட்டு அரசிற்கு 65 விழுக்காடு என்றும், நிர்வாகத்திற்கு 35 விழுக்காடு என்றும், சிறுபான்மைக் கல்லூரிகளில் 50 விழுக்காடு என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எனது முன்னிலையில் வரும் 26ஆம் தேதி ஒப்பந்தமாக கையெழுத்திடப்படவுள்ளது. ஆகவே இதில் எந்தக் குழப்பமும் இல்லை. 65 விழுக்காடு அரசு ஒதுக்கீடு என்பதை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே ராமதாசின் ஐயப்பாடு தேவையே இல்லாதது. மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறிப்பிட்ட படி முறையாக நடக்கும்.
அரசு ஒதுக்கீட்டிற்கான 32,500 ரூபாயையும் சேரும் போதே அண்ணா பல்கலைக்கழகத்திலேயே வங்கிகளிலேயே கட்டுவதற்கான ஏற்பாடு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ளது என்பதையும், அதனை மாணவர்களும் பெற்றோரும் பெரிதும் வரவேற்றுள்ளார்கள் என்று பொன்முடி கூறியுள்ளார்.