''தொலைக்காட்சி மூலம் அரசுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை பரவும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் பாராட்டுவேன். அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய 24 மணி நேர தமிழ் செய்தி தொலைக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், இன்றைய உலகில் செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் இன்றைய முக்கிய செய்தி என்ன என்பதை அறிய நாம் ஆவலுடன் உள்ளோம்.
இதனை நிறைவேற்றுவதற்கு பத்திரிகைகள், வானொலி இருந்த நிலை மாறி இன்றைக்கு காட்சிபூர்வமாக செய்திகளை காண தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. மக்கள் பெரிதும் விரும்புகின்ற செய்தி சாதனங்களாக தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அதனை உணர்ந்துதான் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அளித்த வாக்குறுதிக்கு இணங்க இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது எங்கள் செய்திகளை எடுத்துச்சொல்ல எந்த தொலைக்காட்சியும் முன்வராத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்ற துணிச்சலுடன் செய்திகளை தந்தவர்கள் ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.
என்னுடைய பெயரில், பொறுப்பில் ஒரு தொலைக்காட்சி இயங்குவது அனைவருக்கும் தெரியும். அந்த தொலைக்காட்சி இருக்கும்போது, இன்னொரு தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று சிலர் கேட்கலாம். எல்லா தொலைக்காட்சியும் என்னுடைய தொலைக்காட்சிதான்; நான் வளர்க்க வேண்டிய தொலைக்காட்சிதான். இதில் வேறுபாடு கிடையாது. அந்த பொது நோக்கோடு தான் இந்த விழாவில் நான் பங்கேற்றுள்ளேன்.
இந்த தொலைக்காட்சி மூலம் அரசுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை பரவும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் பாராட்டுவேன். அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.