தர்மபுரி அருகே விஷச் சாராயம் குடித்து 3 பேர் நேற்று பலியானார்கள். இதன் எதிரொலியாக 21 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி அருகே உள்ள குக்கல் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் நேற்று கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரையும் பொம்மிடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவர்களில் வேலு, செல்வம், கோபால் ஆகியோர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதை அடுத்து 21 காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மது விலக்கு ஏ.டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.