தர்மபுரி: தர்மபுரி அருகில் விஷச்சாராயம் குடித்து 3 பேர் இறந்ததுடன், 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. நேரில் விசாரணை நடத்தினார்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.
சனிக்கிழமை குக்கல்மலை கிராமத்தில் சாராயம் குடித்த லாரி கிளீனர் செல்வம் (28) என்பவர் இறந்தார். தொடர்ந்து, அதே பகுதியில் சாராயம் குடித்த மயில் முருகன்(47), கோபால்(55), வேலு(32), சந்திரன்(35), மகராஜன்(34) உள்ளிட்ட 17 பேர் ஆபத்தான நிலையில் தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கோபால், வேலு ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 10 பேர் சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் தர்மபுரி விரைந்த மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், இறந்தவர்களின் உறவினர்களிடமும் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினார்.