தமிழர்களைக் கொன்று குவிக்க சிறிலங்க அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்திட தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரளவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புத்துறைச் செயலர் விஜய் சிங் ஆகியோர் திடீரென கொழும்புச் சென்றுள்ளனர்.
என்ன நோக்கத்துடன் இவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பது வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் மற்றும் செயலாளர் ஆகியோர் இக்குழுவில் சென்றிருப்பது இராணுவ உதவிகள் அளிப்பது சம்பந்தமாகப் பேசுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஏற்கெனவே நார்வே சமரசத் தூதுவரை சிங்கள அரசு தன்னிச்சையாகத் திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றினை நிறுத்தியுள்ளன.
இலங்கையில் நடைபெறும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் பலவும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அரசு, சிறிலங்காவுக்கு அண்மையில் பெருமளவு நிதியுதவி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இப்போது இராணுவ ரீதியான உதவிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது என்பதனை இக்குழுவினரின் கொழும்புப் பயணம் உறுதிசெய்துள்ளது.
தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்திட தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரளவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.