நமது நாட்டின் நலன் கருதி, இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விடயத்தில் காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் சமரச முயற்சிக்காக டெல்லி செல்லவிருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா ஆகியோருடன் இன்று மாலை அணுசக்தி உடன்பாட்டு சிக்கல் தொடர்பாக விவாதிக்கிறார் கருணாநிதி.
சென்னை தீவுத் திடலில் நேற்று நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி, "அணுசக்தி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளை (ஞாயிறு) கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னை வரவிருக்கிறார்கள். அவர்களோடு நான் பேசவிருக்கிறேன். அதன்பிறகு நான் டெல்லி செல்லவிருக்கிறேன்" என்றார்.
"எனது சந்திப்பின் மூலம் ஏற்படும் விளைவுகளும், அந்தத் தகவல் பரிமாற்றமும் இந்தியாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றவோ காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக இந்த இருவரிடையே ஏற்படுகிற நல்லெண்ணம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.
இவர்களிடத்தில் பிளவு ஏற்படுமேயானால் மதவாதச் சக்திகளுக்கு வெற்றியாக ஆகிவிடும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சனை, மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனை என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். அவைகளெல்லாம் வராமல் இருக்க, சுமூகமான அமைதியான இந்தியா அமைய வேண்டும்.
ஒருவேளை விரைவில் தேர்தல் வந்தாலும் வரலாம், உரிய நேரத்தில் தேர்தல் வந்தாலும் அந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டிய முடிவு, யார் ஜெயிப்பது யார் தேற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா? இல்லையா? என்ற கேள்விக்குக் கிடைக்கிற பதிலாகத்தான் அது இருக்கும்" என்றார் கருணாநிதி.