''பா.ம.கவை எவராலும் அழிக்க முடியாது. அவர்களின் கனவும் நிறைவேறாது'' என்று ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசுகையில், கடந்த 17 ஆண்டு காலத்தில் வன்முறையில் பா.ம.க. ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஆனால் தி.மு.க வன்முறையில் ஈடுபட்ட கட்சி என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அவரை தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினார்கள். அப்போது பழ.நெடுமாறன் உள்ளிட்ட சில தலைவர்கள் அவரை காப்பாற்றினார்கள்.
பின்னர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்தபோதும் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். இந்த தகவலையெல்லாம் முன்னாள் அமைச்சர் பாவலர் முத்துசாமி அப்ரூவராக மாறி சொல்லி இருக்கிறார். இந்திராகாந்தி தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு நடந்த தி.மு.க பொதுக்குழுவில், அவர் உயிரோடு திரும்ப கூடாது. மதுரையிலேயே அவரை அடித்து கொல்ல வேண்டும் என்று பேசப்பட்டதாக அவர் சொல்லி இருக்கிறார்.
அப்படிப்பட்ட இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று கூறியவர் கருணாநிதி. இப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்கு இருந்ததில்லை. அதேபோல எம்.ஜி.ஆரை மலையாளி என்று கூறி தமிழ்நாட்டிலிருந்த மலையாளிகளை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இப்போது மும்பையில் மற்ற மாநிலத்தவர்கள் மீது நடப்பது போல அப்போது இங்கும் நடந்தது.
1989ல் பா.ம.க தொடங்கப்பட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்போதாவது நடந்ததா? எங்களைப்போய் வன்முறைக் கட்சி என்று முத்திரைகுத்த முதலமைச்சரே உங்களுக்கு எப்படி மனம் வந்தது?
எந்தநிலையிலும் உங்களிடம் நட்பு பாராட்டி தோழமை கொண்டிருந்த எங்களை பார்த்து குழி பறிப்பவன் என்று சொல்வது நியாயமா? பா.ம.கவை எவராலும் அழிக்க முடியாது. அவர்களின் கனவும் நிறைவேறாது என்று ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.