பலத்த மழை காரணமாக சென்னையிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 2-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அங்குள்ள சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன. சில இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சென்னையில் இருந்து வடமாநிலங்களான ஒரிசா, கொல்கத்தாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2-ம் நாளான இன்றும் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20ஆம் தேதி) அவுராக்கு (கொல்கத்தா) மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் (வ.எண். 2841), எழும்பூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு கவுகாத்திக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் (5630), காலை 8.45 மணிக்கு அவுராவுக்கு செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் (2842) ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல், கவுகாத்தியில் இருந்து சென்டிரல் வழியாக 22ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் எர்ணாகுளம் விரைவு ரயில் (2508). திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, ஷாலிமாருக்கு இயக்கப்படும் ஷாலிமார் விரைவு ரயில் (6323),
பெங்களூரில் இருந்து சென்டிரல் வழியாக இன்று காலை 6.30 மணிக்கு, கவுகாத்திக்கு இயக்கப்படும் கவுகாத்தி விரைவு ரயில் (2509), அவுராவில் இருந்து எழும்பூர் வழியாக இரவு 8.20 மணிக்கு (இன்று) திருச்சிக்கு இயக்கப்படும் திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (2663) ரெயில், திருச்சியில் இருந்து சென்னை வழியாக அவுராவுக்கு இரவு 10.30 மணிக்கு புறப்படும் அவுரா எக்ஸ்பிரஸ் ( 2664) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.