''தமிழகம் ஆயுத கிடங்காக மாறிவிட்டது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி வருமா? இல்லையா? என்பது தேர்தல் நெருங்கும்போது தெரியவரும்.
பா.ம.க.- தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் எதிரணிக்குள் குழப்பம் நிலவுகிறது. குழப்பம் இல்லாமல் மிகத்தெளிவாக நாங்கள் இருக்கிறோம். எங்களோடு இருக்கும் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. தேர்தல் நெருங்கும்போது இன்னும் சில கட்சிகள் எங்களோடு வரும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது எங்களது கவலை தமிழகம் ஆயுத கிடங்காக மாறிவிட்டதே என்பதுதான். தூத்துக்குடியில், மதுரையில் விடுதலைப்புலிகளுக்காக குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. கும்மிடிபூண்டியில் ஆலை எடுக்கப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து யார் மூலம் வாங்கப்பட்டது என்ற உண்மை நிலைமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று இல.கணேசன் வலியுத்தினார்.