''தி.மு.க- பா.ம.க இரு கட்சிகளுமே 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அணுகுமுறையில் தொடர்ந்து இணைந்து செயல்படவேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணியில் இருந்து பா.ம.க.வை நீக்கம் செய்து, தி.மு.க அறிவித்துள்ளது கூட்டணியின் வலிமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தி.மு.க.வின் இந்த முடிவு பா.ம.க.வை பாதிக்கும் என சிலரும், தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சிலரும் மகிழ்ச்சி அடைவர். ஆனால், இந்த முடிவு கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விடுதலைச் சிறுத்தை அமைப்பு வேதனைப்படுகிறது.
தமிழக அரசியல் சூழலில் ஒருபுறம் மதவெறி சக்திகளின் கூட்டு முயற்சியும், மறுபுறம் திரைப்பட மாயையை முன்னிறுத்தி மக்களை ஏய்த்து ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவற்றுக்கு இடையே தி.மு.க கூட்டணி வலிமையாக இருக்கவேண்டும்.
தி.மு.க- பா.ம.க இரு கட்சிகளுமே 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அணுகுமுறையில் தொடர்ந்து இணைந்து செயல்படவேண்டும். இது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து, முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவேன் என்று திருமாவளவன் கூறினார்.