பலத்த மழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டோது போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.
இதனால், சென்னை சென்டிரலில் இருந்து ஒரிசா வழியாக கொல்கத்தா செல்லும் 2 விரைவு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதாவது, நேற்று காலை 8.45 மணிக்கு சென்டிரலில் இருந்து அவுரா புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் (வ.எண்.2842), இரவு 11.35 மணிக்கு புறப்படும் அவுரா மெயில் (2840) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதே போல், அவுராவில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் (2841), இன்று (19ஆம் தேதி) அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் அவுரா மெயில் (2839) ரத்து செய்யப்பட்டன.
அதே போல சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு புறப்படும் பெங்களூர்-கவுகாத்தி விரைவு ரெயில் (வ.எண்.2509), காலை 9.55 மணிக்கு புறப்படும் ஜஸ்வந்த்பூர்- முசாபர்பூர் விரைவு ரயில், ஜஸ்வந்த்பூரில் இருந்து கோரக்பூருக்கு, காட்பாடி வழியாக செல்லும் விரைவு ரயில் (வ.எண். 2864), மாலை 4 மணிக்கு புறப்படும் சாலிமார்-திருவனந்தபுரம் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
20ஆம் தேதி சாலிமரில் இருந்து நாகர்கோவிலுக்கு காட்பாடி வழியாக செல்லும் குருதேவ் விரைவு ரயிலும் (2660) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகள் டிக்கெட்டினை ரத்து செய்யும் வகையில் 4 சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழு கட்டணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பயணிகளுக்கு ரயில் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் சிறப்பு தகவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் 044-2535 7393, 2534 7277 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ரயில் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.