''விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த ம.தி.மு.க.வின் மண்டல மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 6 வருடங்களுக்கு முன்பு ஒபாமா கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.
நாமும் சாதிக்க முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.
விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள் என்று வைகோ கூறினார்.