''நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்பு உள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம்'' என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வெளியேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
பா.ம.க. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று அமைச்சர் பதவியிலும் இருந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்புள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த கட்சியும் தீண்டத்தகாத கட்சியல்ல. தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்கு வைப்பது குறித்து விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
ராமர் இல்லை என்று கூறி வந்த கருணாநிதி, தற்போது இத்திட்டத்திற்கு சேதுராம் என பெயர் சூட்டலாம் என்று கூறியிருப்பது அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.