''எண்ணெய் நிறுவனங்களின் மறைமுக நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக் கூடும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பிரீமியம் பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படுகின்ற அவல நிலைமை நிலவுகிறது. அதாவது 49 ரூபாய் 64 பைசாவாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 59 ரூபாய் 20 பைசாவுக்கும், 34 ரூபாய் 44 பைசாவாக இருந்த டீசல் விலை தற்போது 39 ரூபாய் 50 காசு அளவுக்கும் விற்கப்படுகிறது.
அதாவது, பெட்ரோலை லிட்டருக்கு 9 ரூபாய் 70 பைசா கூடுதல் விலை கொடுத்தும், டீசலை லிட்டருக்கு 5 ரூபாய் 6 பைசா கூடுதல் விலை கொடுத்தும் வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பொது மக்கள் தற்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது மட்டும் அல்லாமல், ஆயிலின் விலையும் லிட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பிரீமியம் பெட்ரோல், டீசலை மட்டுமே விற்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் பங்க் உரிமையாளர்களை நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற பிரீமியம் வகை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நிர்ணயிப்பதில்லை. இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இந்த நிலை நீடித்தால், மத்திய அரசின் அறிவிப்பு இல்லாமலேயே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.
எண்ணெய் நிறுவனங்களின் இது போன்ற மறைமுக நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக் கூடும். இதைத் தொடர்ந்து பண வீக்கமும் அதிகரிக்கும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. தற்போது மறைமுகமாக மேலும் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வேதனைக் குரிய விஷயமாகும். மத்திய அரசு, வழக்கம் போல், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசலை அனைத்து பங்க்குகளுக்கும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.