சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு, நாளையும் (19ஆம் தேதி) நாளை மறுநாளும் (20ஆம் தேதி) சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் கருணாநிதியின் தலைமை உரையுடன் மாநாடு நாளை தொடங்கி வைக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் இடையே நடக்கும் கூட்டு மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு பற்றி டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி., மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.கள், காவல்துறை சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறும்.
20ஆம் தேதி அன்று நடக்கும் 2ஆம் நாள் மாநாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோர் விவாதிப்பார்கள். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.