தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் பா.ம.க.வை கூட்டணியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க.வை நீக்கியது ஏன்? என்பது பற்றியும் தீர்மானத்தில் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தேர்தல் உடன்பாடு அல்லது கூட்டணி அல்லது தோழமைக் கட்சிகளின் கூட்டு என்கின்ற தலைப்புகளில் தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் உடன்பாடும் உறவும் கொண்ட போதெல்லாம் யார் யார் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்படி எடுத்த நிலைக்கு எடுத்துக்காட்டாக இப்போதும் அவைகள் விளங்குகின்றன.
ஆனால் நமது தோழமை அணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே குற்றம் குறைகளை வேண்டுமென்றே வெளிப்படையாக எடுத்துச் சொல்வதும் அந்தக் காரியங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும் அந்தக் குற்றம் குறைகள் களையப்படுகின்ற நேரங்களில் கூட அவற்றுக்கான மன நிறைவு கொள்ளாமலும் மேலும் மேலும் ஆளுங்கட்சி மீது மனதைப் புண்படுத்தும் வாசகங்களை அறிக்கைகளாக்குவதும் நிருபர்களுக்குத் தரும் பேட்டிகளில் வேண்டாத வாசகங்களைப் பயன்படுத்தி கட்சிகளுக்கிடையே வெறுப்பு, பகை ஆகியவற்றை விதைத்து மகிழ்வதும், இந்த அணியிலே உள்ள பா.ம.க.வினுடைய தனித்தன்மையாக இருந்து வருவதை நாமும் சுட்டிக் காட்டியிருக்கிறோம், மற்ற கட்சித் தலைவர்களும் அதை உணர்வார்கள், பொது மக்களுக்கும் புரியும்.
"மைனாரிட்டி அரசு'' என்ற கேலி மொழியும் - "பலவீனங்களையும், தவறுகளையும கையாண்டு வரும் தி.மு.க. அரசுக்கு நான் மதிப்பெண்களைப் போட விரும்பவில்லை'' என்பது போன்ற வாசகங்கள் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் மூலமாக வெளிவந்த போது கூட அவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு, பொறுமையோடும், பொறுப்புணர்வோடும் கருணாநிதி பதில் சொல்லியிருக்கிறாரே அல்லாமல் எந்தவொரு சம்பவத்திலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவர் பதிலளிக்கவில்லை.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க.வின் முன்னோடிகளுக்கும் - தி.மு.க.வின் முன்னோடிகளுக்கும் ஏற்பட்ட கசப்புணர்வு கட்சிகள் வாயிலாக நாகரிகத்தைப் பேண வேண்டும் என்று எண்ணுகின்ற தலைவர்களுக்கெல்லாம் ஒரு அறை கூவலாக அமைந்திருக்கின்றது.
காடுவெட்டி குருவின் வன்முறைப் பேச்சுக்காக கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கவோ, அவரை மன்னிப்பு கேட்கச் செய்யவோ கட்சியின் தலைவரான ராமதாஸ் முன்வராமல் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்ட பிரச்சினை என்று கூறுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.
தி.மு.க. அரசு அண்மைக் காலத்தில் எதைச் செய்தாலும், அதைப் பற்றி கிண்டலும், கேலியுமாகப் பேசுவதும்; நாள்தோறும் அறிக்கை, பேட்டி என்று கழக அரசைக் குத்திக் காட்டிக் குழப்பத்தை ஏற்படுத்துவதும்; மக்கள் நலனுக்கு முரணான அரசு என்பதைப் போன்ற எண்ணத்தையும் ஏற்படுத்திட பெருமுயற்சி செய்து அதன் மூலம் மலிவான விளம்பரத்தைத் தேடிக் கொள்வதும்; ராமதாசின் அரசியல் பாணியாக அமைந்து விட்டது.
எவ்வளவு இழிவாக, தரக் குறைவாக, தன்மான உணர்வைப் பறிக்கும் விதமாக கேவலப்படுத்தப்பட்டாலும், அதற்காக அவர் ஒரு மன்னிப்பு கூடக் கேட்காத நிலையில், இதுவரை அவர் மீது பா.ம.க. தலைமை நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், அப்படி கேவலப்படுத்துகிறவர்களோடு உறவை நீடிப்பது தான் கூட்டணியின் இலக்கணம் என்று ஏற்றுக் கொள்ள இயலாத காரணத்தால் அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனி தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வருத்தத்தோடு அறிவிக்கின்றது