பா.ம.க.வுடன் உறவை தொடரமுடியாது என்ற தி.மு.க.வின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு மேற்கொண்டுள்ள முடிவை பார்க்கையில், "இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்'' என்ற புகழ்பெற்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினையில் எங்கள் தரப்பு வாதங்களையும், அதில் உள்ள நியாயங்களையும் ஏற்கனவே, தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
தனிமனித விவகாரங்களை, தனிமனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி அதை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது தி.மு.கழகத்துக்கு புதிதல்ல. கூட்டணி என்கிறார்கள். தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால் முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு முடிவை தி.மு.க. எடுத்துவிட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில் தி.மு.க.வின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. இதுவரையில் எங்களைச்சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக்கொண்டிருந்தோம்.
தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்சினைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது, "இலக்குமணன் கோடு'' என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாக குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதில் இருந்து கிஞ்சித்தும் மாறமாட்டோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.