இலங்கையில் சமூக சேவகி தங்கம்மா அப்பாகுட்டி மறைவிற்குத் தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் சமூக சேவகி தங்கம்மா அப்பாகுட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தங்கம்மா அப்பாகுட்டி தமிழ் மொழியை முறைப்படி கற்று ஆசிரியராக விளங்கியவர். `தமிழ் பண்டிதை' என ஈழப்பகுதி வாழ் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர்.
நூலகம் ஒன்றை நிறுவி சிறந்த நூல்கள் வெளியிடுவதற்கும் உதவிகள் புரிந்துள்ளார். ஆசிரியை பணி சமூக நற்பணிகள் மூலம் ஈழத் தமிழ் மக்களின் அன்பிற்குரியவராக திகழ்ந்த அவரது மறைவு ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.