ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்களின் ஈரோடு மாவட்ட ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது.
கூட்டத்தில், அனைத்து பிரதம பால் கூட்டுறவு சங்கங்களையும் அரசு பால்வளத் துறையின் கொள்முதல் நிலையங்களாக ஏற்று பணியாளர்கள் அனைவரையும் பால்வளத் துறை ஊழியர்களாக ஏற்றுக்கொண்டு அரசே சம்பளம் வழங்கவேண்டும்.
பால்வளத் துறை மானியக் கோரிக்கை எண் 25,26 மற்றும் 29 ல் மூன்றடுக்கு முறையில் செயல்படும் தமிழக பால்வளத் துறையில் மாவட்ட ஒன்றிய மாநில இணையப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பால்வளத் துறைக்கு ஆணிவேராக செயல்படும் பிரதம பால் கூட்டுறவு சங்க பணியாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி சலுகை வேண்டும்.
இடைகால நிவாரணம், அகவிலைப்படி ஆகியவற்றை உடனடியாக உயர்த்த வேண்டும். சங்கங்களுக்கு தனி அலுவலர்களாக பால்வளத் துறையில் உள்ள அரசு அதிகாரிகளை மட்டுமே நியமனம் செய்யவேண்டும்.
பால்வளத் துறை மானியக் கோரிக்கையில் பிரதம சங்க பணியாளர்களுக்கான பணிநிலைத் திறன், பணியாளர் சிறப்பு துணை விதி பணி வரன்முறைப் படுத்ததுதல் மற்றும் ஊதிய விகிதம் நிர்ணயம் ஆகியவற்றிற்கான குழுவில் பணியாளர்களின் தரப்பை தெரிவிக்க பணியாளர்கள் இணையத்தை சார்ந்த உறுப்பினர்களாக குறைந்த பட்சம் 2 நபர்கள் இடம் பெற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றகோரியும், தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இம்மாதம் 25 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு டி.ஜி. புதூர் பால் உற்பத்தியளார்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலர் பி.ஆண்டவன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலர் உத்தண்டியூர் சங்க செயலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துரைசாமி, சிவகாமி, சுப்பிரமணி, மயில்சாமி, ஜெகதீசன், நடராஜ் ஆகியோர் கோரிக்கை முன்வைத்து பேசினர்.