மத வெறி கும்பலிடம் இருந்தும் தமிழ்தேசத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க இருப்பதோடு, தி.மு.க. - பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் தோழமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க. தலை மையிலான கூட்டணி மிக வலிமையோடு தொடர்ந்து இயங்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும்.
மக்கள் விரோத சக்திகளை விரட்டி அடிப்பதற்கு தி.மு.க. கூட்டணி வலுவிழக்கால் இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கூட்டணியில் தி.மு.க.-பா.ம.க. இடையே அண்மை காலமாக எழுந்துள்ள கசப்பான முரண்பாடுகள் சரி செய்யப்பட்டு ஒரு நல்லிணக்க உறவு தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி விரும்புகிறது.
கடுமையான விமர்சனங்கள் என்பதை எல்லாம் கடந்து, மக்கள் நலன் கருதி, மொழி இனம் கருதி தி.மு.க. கூட்டணி ஒற்றுமையோடு இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். எனவே பா.ம.க. இன்று செயற்குழுவில் நல்லிணக்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழமையோடு சுட்டிக்காட்டுகிறது.
திரைப்பட மாயைக்காட்டி மக்களை ஏமாற்ற துடிப்பவர்களிடம் இருந்தும், பாசிச சக்திகளிடம் இருந்தும், மத வெறி கும்பலிடம் இருந்தும் தமிழ் தேசத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு தி.மு.க.-பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் தோழமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வேண்டுகோள் வைக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.