சென்னை பரங்கிமலையில், நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் ஒருவர் பலியானார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவிநகரைச் சேர்ந்த அரசு (84) என்பவர் உறவினர் ஒருவர் இறந்ததற்கு துக்கம் விசாரிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் ஆம்னி காரில் ஆவடி சென்றார். பின்னர் காரில் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இரவு 9 மணி அளவில், பரங்கிமலை பட்ரோடு கண்டோன்மெண்ட் போர்டு ராணுவ குடியிருப்பு அருகே கார் வந்த போது கார் தீ எரிந்தது. இதை பார்த்து அலறிய டிரைவர் செய்வதறியாமல், எதிரே இருந்த சுவற்றில் காரை மோதினார்.
காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கி முடியாமல் தவித்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை காரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதில் நான்கு பேர் தீக்காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த அரசு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.