தனிப்பட்ட முறையில் தி.மு.க தலைவர்களை பா.ம.க.வினர் தாக்கிப் பேசுவதை ஏற்க முடியாது என்று முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க கூட்டணியில் பா.ம.க நீடிப்பது குறித்து கடலூர் மகளிரணி மாநாட்டிற்கு பிறகு கட்சியின் உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசின் கொள்கைகள் மீதான தாக்குதல்களை விட தி.மு.க தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட தாக்குதல்களே இந்த முடிவுக்கு காரணம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் அ.ராசா மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் பற்றி பாமகவின் முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி ஜெ.குரு பேசிய பேச்சுக்களையும் மிரட்டல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேட்டி ஒன்றில் கருணாநிதி கூறியுள்ளார்.
கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க உரிமை உள்ளது என்றபோதிலும் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர்களை தாக்கிப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டால் மத்திய அமைச்சர் ராசாவும், சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரும் உயிரோடு இருக்க முடியாது என்று குரு பேசியதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, யார் தலை உருளும் என்பது முக்கியமல்ல என்றும், யார் தலை உருண்டாலும் ரத்தம் சிந்தும் என்றும் கூறியுள்ளார்.
ஆத்திரமூட்டும் வகையில் தி.மு.க ஒருபோதும் பேசியதோ, நடந்து கொண்டதோ இல்லை என்றும் கூறிய கருணாநிதி, சிலர் இதனை திரித்துக் கூறுகின்றனர் என்றும் அவற்றில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.