பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதம் கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலுடன் தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகையில் 50 விழுக்காடு பேர் பெண்கள். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக ஆண்டாண்டு காலமாக ஆண்கள் ஆதிக்கம் அதிக ரித்து வந்திருக்கிறது.
இந்தியாவில் 26 நிமிடத்துக்கு ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுகிறாள். 34 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள், 43 நிமிடத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களில் இப்போது பெண்களுக்கான இடம் 8 விழுக்காடு மட்டுமே. 6 விழுக்காடு பெண்களே அமைச்சர்களாக உள்ளனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் 4 விழுக்காட்டுக்கும் குறைவான பெண்களே நீதிபதிகள்.
இதை கருத்தில் கொண்டு ஜெயலலிதா தலைமையில் ஆன அ.தி.மு.க. பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இதை நிறைவேற்றி அமுல்படுத்த வேண்டும். இதில் இனியும் தாமதம் கூடாது. சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள்.
இந்த பெண்கள் இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் தலித்துக்கள், பிற்பட்ட வகுப்பினர், முஸ் லிம்கள், மற்றும் இதர சிறு பான்மை பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விடும் என்பது இதற்கு ஒரு காரணம் ஏற்கனவே எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு உள்ள 22.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுடன் பெண்களுக்கான 33.3 விழுக்காடு இட ஒதுக்கீடும் சேர்த்து கொண்டால் மொத்த இட ஒதுக்கீடு 55 விழுக்காட்டும் அதிகமாக போய்விடும். இது மற்ற பிரிவினருக்கு போதுமானதாக இருக்காது என்பது இன்னொரு காரணம்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போது பிராந்திய வாரியாகவோ தொகுதி வாரியாகவோ பாரபட்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தான் சமூதாயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றும் பெண்களுக்கு நாம் அளிக்கும் கவுரவம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.