டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 ஊதிய உயர்வு அளிக்க நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ வசதி, போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் 9 அம்ச கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை என்.எல்.சி. நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டது.
பணி நிரந்தரம் கோரும் ஒப்பந்த தொழிலாளர்கள் இனி தொழிற்சாலை சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நெய்வேலியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நிரந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.
இதேபோல், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.750 சம்பள உயர்வு அளிக்கவும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா, 'கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இது பற்றி ஜீவா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சேகர் கூறுகையில், 'வாய்மொழியாக நிர்வாகம் அளித்துள்ள உறுதிமொழிகளை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக்கி நிறைவேற்றுவது குறித்து வருகிற 16ஆம் தேதி மத்திய தலைமைத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் மொஹோபாத்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். சட்டப்பூர்வமாக, ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்வரை ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்' என்றார்.