பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் அளவு சாப்பாட்டில் கூடுதலாக 50 கிராம் சாதம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசனையின்படி, உணவு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 3ஆம் தேதி முதல் உணவகங்களில் உணவு பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கள் சேகரித்தோம். அப்போது உணவின் தரம், சுவை, அளவு குறையவில்லை நன்றாக இருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். அளவு சாப்பாட்டில் சாதத்தின் அளவை சற்று அதிகரித்தால் மேலும் பயனடைவோம் என்ற கருத்தினை பத்திரிகையாளர்கள் உள்பட பலர் தெரிவித்தனர்.
உணவு அமைச்சர் கேட்டுக் கொண்டதின் பேரில் நாளை (15ஆம் தேதி) முதல் அளவு சாப்பாட்டில் சாதத்தின் அளவை அதிகரித்து 300 கிராம் சாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உணவக உரிமையாளர்கள் இந்த முடிவினை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ரவி கூறியுள்ளார்.
ஏற்கனவே ரூ.20க்கு வழங்கப்பட்ட 250 கிராம் அளவு சாப்பாடு திருப்தி இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர் என்பதும் அதையடுத்து தற்போது அளவு அதிகரிப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.