கடலூரில் தி.மு.க. மகளிர் அணி முதல் மாநில மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மகளிர் ஊர்வலத்தை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்.
தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை வசந்தி கணேசன் ஏற்றுவைத்து தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக 3 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாகவும், 2-ம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாகவும் நடைபெறுகிறது. முதல் நாள் மாநாட்டை இன்று காலை 9 மணிக்கு வசந்தி கணேசன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். பிற்பகல் 2 மணிக்கு 3 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது. இதனை நூர்ஜகான் பேகம் தொடங்கி வைக்கிறார்.
மூன்றரை கி.மீ. தூரம் உள்ள ஊர்வலப்பாதையில் அணிவகுத்து வரும் மகளிர் அணியினரின் பிரமாண்ட பேரணியை தனிமேடையில் அமர்ந்து முதலமைச்சர் கருணாநிதி பார்வையிடுகிறார். இதற்காக சில்வர்பீச் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே தனிமேடை அமைக்கப்பட்டு உள்ளது.
பேரணியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அரசியல் மாநாடு நடக்கிறது. தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சற்குணபாண்டியன் தலைமை தாங்குகிறார்.
நாளை (15ஆம் தேதி) நடைபெறும் 2ஆம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாக நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு துணைப் பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இரவு 7 மணிக்கு தி.மு. கழக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசுகிறார். இரவு 8 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். மாநாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
மாநாட்டையொட்டி 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.