விலைவாசி உயர்வு பிரச்சினையில், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் செல்போன் வைத்திருக்கிறார். காய்கறி விற்பவரும் செல்போனை பயன்படுத்துகிறார். மேலும் வளரும் பொருளாதாரமும் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்துகிறது.
வளரும் பொருளாதாரம் நமக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் சில பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. நாடு மிக கடினமான பாதையில் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். எந்த பன்னாட்டு மாநாடு, கருத்தரங்காக இருந்தாலும் அதில் இந்தியாவின் கருத்துகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சில சிக்கல்கள் உள்ளது.
அதற்கு உலக அளவில் நிலவி வரும் கச்சா எண்ணை விலை உயர்வும், அத்தியாவசிய பொருட்களான உணவுப்பொருள் உற்பத்தி 2 ஆண்டுகளில் குறைந்ததும் காரணமாகும். உலகளவில் உணவு, தானிய இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வேளாண் உற்பத்தி சிறப்பாக உள்ளது. மற்ற ஆண்டுகளை விட சாதனை அளவாக கோதுமை, அரிசி கையிருப்பு அதிகமாக உள்ளது.
கடந்த 1998- 2004-ம் ஆண்டுகளில் ஒரு பேரல் கச்சா எண்ணை 13 முதல் 35 டாலர்களாக இருந்தது. தற்போது 134 முதல் 139 டாலராக உயர்ந்துள்ளது. இது மிக கடினமான சூழல். இதைப் போன்ற பல்வேறு கடினமான சூழ்நிலைகளை நாடு ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.
இந்திய சுதந்திரப்போராட்டம், 1960-70 ஆண்டுகளில் அண்டை நாடுகளின் படையெடுப்பு, 1970-80 களில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டோம். இவை அனைத்தையும் நாம் வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறோம். தற்போதைய சூழலையும் நாம் வெற்றிகரமாக மீண்டு வருவோம். நம்மால் எதுவும் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு அரசுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிப்பது கடமையாகும் என்று சிதம்பரம் கூறினார்.