நளினி தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகள் கால அவகாசம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ராஜீவ் கொலையாளி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
17 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியசுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால். பொது நலம் கருதி சுப்பிரமணிய சுவாமியை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், நளினி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுப்பிரமணியசுவாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். அவற்றுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் ஆகியோர் இந்த வழக்கில் பிரதான மனுவுக்கு பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்றுக்கொண்டு நீதிபதி நாகமுத்து, வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.